Wednesday, December 20, 2017

நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வும்! நெஞ்சு நிறைந்த நன்றியும்!!



தர்மபுரி மாவட்டத்தில், TRANSMISSION பிரிவில் பணிபுரிந்த தோழர்கள், 02.09.2017 அன்று இலாக்கா பணிக்காக சென்ற போது, அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது.  சம்பவ இடத்திலேயே, இரண்டு தோழர்கள் உயிர் நீத்தனர். மேலும் நான்கு தோழர்கள் படுகாயம் அடைந்தனர்.

இறந்த இரண்டு தோழர்களில் ஒருவர், தோழர் M . ஜீவா, 2017 ஜூன் மாதத்தில் நேரடி நியமன Junior Engineer ஆக, BSNLல் பணியில் சேர்ந்தவர். மற்றுமொரு தோழர், 20 ஆண்டுகளாக BSNL நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த தோழர் T . கஜேந்திரன். 

இரண்டு தோழர்களின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில், சங்க வித்தியாசமின்றி, அதிகாரி, ஊழியர் பேதமின்றி, அனைவரும் ஒன்று சேர்ந்து தோழர்களின் குடும்பங்களுக்கு உதவுவது என முடிவு எடுத்தோம். நிவாரண நிதி வசூல் செய்ய, ஒரு குழுவை  அமைத்தோம். "தோழர்கள் ஜீவா மற்றும் கஜேந்திரன் குடும்ப நிவாரண நிதி" என பெயரிடப்பட்ட அக்குழுவின் தலைவராக, தர்மபுரி மாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களும், செயலராக DGM (HR/Admn) அவர்களும், பொருளாளராக DGM (Finance) அவர்களும் செயல்பட முடிவு எடுக்கப்பட்டு, வங்கியில் தனி கணக்கு துவங்கப்பட்டது. 08.09.2017 அன்று இணையம் வாயிலாக, நிதி உதவி செய்ய கோரிக்கை வைத்தோம். 

உடனடியாக, நிதி, வங்கி கணக்குக்கு வர துவங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் பல ஊழியர்கள் / அதிகாரிகள் ரூ.1000 முதல் ரூ. 5000 வரை தாராளமாக வழங்கினர். மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் / ஊழியர்கள் நிதி வழங்கினர். ஒப்பந்த ஊழியர்கள், தங்களது, ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க  ஒற்றுமையாக முடிவு எடுத்து ஒரு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். 

அதே போல், தமிழ் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், நன்கொடை வர துவங்கியது. மூன்று மாதத்தில் ரூ. 15,55,212.00 நிதி, வங்கி கணக்குக்கு வந்து சேர்ந்தது. 

வசூலிக்கப்பட்ட நிதியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க சிறியளவிலான ஒரு நிகழ்ச்சி, 18.12.2017 அன்று தர்மபுரி பொது மேலாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

முதன்மை பொது மேலாளர் திரு. K . வெங்கட்ராமன் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். அவர் கரங்களால் நிதி கீழ்கண்ட முறையில் குடும்பங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. 

தோழர் T . கஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் குடும்பத்துக்கு - ரூ. 9,95,212
தோழர் ஜீவா, JE குடும்பத்திற்கு - ரூ. 5,50,000
அதில், தோழர் கஜேந்திரன் இரண்டு சிறு பெண் குழந்தைகள் பெயரில் தலா ரூ. 3,85,000, திருமதி. கஜேந்திரன் பெயரில் ரூ.1,60,212, தோழர் கஜேந்திரன் பெற்றோர்களுக்கு ரூ. 65,000 என பிரித்து வழங்கப்பட்டது. தோழர் ஜீவா அவர்களின் பெற்றோரிடம் ரூ. 5,50,000 ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டது. 

இதுபோக, விபத்தில் காயமடைந்த வாகன ஓட்டுநர், தோழர் மூர்த்தி (ஒப்பந்த ஊழியர்) அவர்களுக்கான முழு மருத்துவ செலவையும் ஈடுகட்டி, ஒரு மாத சம்பளத்துடன், ரூ. 10,000 நிவாரண நிதி வழங்கப்பட்டது. 

குடும்ப நிவாரண நிதி தாரீர் என வேண்டுகோள் விடுத்தவுடன், ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில்  கொண்டு, தாராளமாக நிதி உதவி வழங்கிய, அத்துணை நல் உள்ளங்களுக்கும் முதலில், இருகரம் கூப்பி நன்றியை உரித்தாக்குகிறோம். 

பாதிக்கப்பட்டவர்கள் ஊழியர்கள் தான் என்றாலும், அனைவரும் BSNL குடும்பம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தனியாக வங்கி கணக்கு துவங்கி PGM, DGM, AGM, CAO  உள்ளிட்ட அதிகாரிகளே, குழுவை வழிநடத்தி, ஒரு உணர்வுபூர்வமான இந்த புனித பணியை தங்களின் கடமையாக சிரமேற்கொண்டு செய்து, மன நிறைவான ஒரு தொகை வசூலாக வழி வகை புரிந்த அத்துனை அதிகாரிகளுக்கும்  எமது நன்றி கலந்த வணக்கங்கள். 

நிதி வசூல் புரிய, தேனீக்களாக பறந்து, பம்பரமாக சுழன்று, அன்போடும் பண்போடும் அனைவரையும் அனுகி, கள பணியாற்றிய BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், கிளை நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் அனைவருக்கும் எமது செவ்வணக்கம். 

எங்களது இந்த பணிக்கு ஆதரவாக, நீங்களும் ஆதரவு கரம் நீட்டுங்கள் என தோழமையுடன் கேட்டு கொண்டதிற்கிணங்க, 
பாகுபாடின்றி உதவிக்கரம் நீட்டிய அனைத்து BSNL ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றிகள். 

ஒரு மாவட்டம் சார்ந்த பிரச்சனையாக பார்க்காமல், மாநிலம் முழுவதும் ஆதரவு கரம் நீட்டிய அனைவரின் பங்களிப்பும், பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது. 

எளிமையாக, நெகிழ்ச்சியாக, நடைபெற்ற இந்த நிகழ்வில், தர்மபுரி மாவட்ட PGM திரு. K . வெங்கட்ராமன், திரு. P . ராதா DGM(HR/Admn), திரு. V. பாஸ்கரன் DGM(F), திருமதி. சாந்தி DGM(CM), திரு. R . கோபாலன், CAO(F), திருமதி சுகந்தி பாஸ்கரன் AGM(HR/Admn),   உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தொழிற் சங்க பிரதிநிதிகளாக, BSNLEU சார்பாக தோழர்கள் P. கிருஷ்ணன், S . அழகிரிசாமி, D. பாஸ்கரன், N . ரமேஷ், M . பருதிவேல், L .ஜோதி பிரகாஷ், K . பன்னீர் செல்வம், C .குஞ்சு, A . தங்கவேல், N . வரதராஜன், SNEA சார்பாக தோழர்கள் B. மகேஷ்குமார், T .P .சம்பத்குமார், NFTEBSNL சார்பாக தோழர்கள் C . பத்மநாபன், L . கண்ணன், AIBSNLEA சார்பாக தோழர்கள் G.தண்டபாணி, M .குப்புசாமி, TEPU சார்பாக தோழர் A . அம்மாசி உள்ளிட்ட தோழர்கள், முன்னணி ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

மன நிறைவோடு, மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றியை உரித்தாக்குவது...

தோழன்,  
பொன். கிருஷ்ணன்,
மாவட்ட செயலர், BSNLEU 
நிவாரண நிதி குழு சார்பாக....